காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 22
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
தொடர் 22
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
காத்தவராயன் வசனம்:
|
தம்பி, நேரம் வீணாகக் கழிகின்றது. பொழுது போக்கிற்காக ஏதாவது விளையாட்டு விளையாடுவோமா?
|
சின்னான் வசனம்:
|
எப்படியான விளையாட்டு விளையாடலாமண்ணா? சூது, சொக்கட்டான்...
|
காத்தவராயன் வசனம்:
|
தம்பி! சூது, சொக்கட்டான் ஆடுவது எளிய வேலையல்லவா?
|
சின்னான் வசனம்:
|
நம்மைப்போன்ற பெரிய ராஜாக்கள் எல்லாம் ஆடும்போது, நாம் ஆடுவதில் தப்பேது அண்ணா?
|
காத்தவராயன் வசனம்:
|
சரி அப்படியென்றால் ஆடுவோம். ஆனால் ஒரு நிபந்தனை சூது, சொக்கட்டான் ஆடுவதாயிருந்தால் ஏதும் பந்தயம் வைத்துத்தான் ஆடவேண்டும்.
|
சின்னான் வசனம்:
|
பொழுது போக்கிற்காக விளையாடுவோமென்று கூற்விட்டு பந்தயம் என்கிறீர்கள்? சரி என்ன விதமான பந்தயம் அண்ணா?
|
காத்தவராயன் வசனம்:
|
சூதாட்ட முடிவில் உன்னிடம் நான் தோற்றுவிட்டால், எனது நாடு, நகரம் அனைத்தும் உனக்கே தந்து, நானும் உனது தோழமையாக வருவேன். ஒருவேளை நீ என்னிடம் தோற்றுவிட்டால் அதே போன்று எனக்குத் தோழமையாக வரவேண்டும்.
|
சின்னான் வசனம்:
|
சரி, அப்படியே ஆகட்டும் அண்ணா. முதலில் நீங்களே ஆட்டத்தை ஆரம்பியுங்கள்.
|
காத்தவராயன் வசனம்:
|
தம்பி! நாடு உனது, நகரம் உனது, அரண்மனை உனது ஆதலால் நீயே முதலில் ஆட்டத்தை ஆடுபார்க்கலாம்.
|
சின்னான் வசனம்:
|
இதோ ஆடுகிறேன் அண்ணா.
|
சின்னான் பாடல்:
|
ஓராட்டம் ஆட்டம் சூதெறிந்து - எந்தன்
ஓராட்டம் அண்ணாவே வெற்றி பாரும் |
காத்தவராயன் பாடல்:
|
ஈராட்டம் ஆட்டம் சூதெறிந்து - எந்தன்
ஈராட்டமும் தம்பியாரே தோற்று விட்டேன் |
சின்னான் பாடல்:
|
மூவாட்டம் மூவாட்டம் நானெறிந்து - எந்தன்
மூவாட்டமும் அண்ணையாரே வென்றுவிட்டேன் |
காத்தவராயன் பாடல்:
|
நாலாட்டம் நாலாட்டம் நானெறிந்து - எந்தன்
நாலாட்டமும் தம்பியரே தோல்வியடா |
சின்னான் பாடல்:
|
ஐந்தாட்டம் ஆட்டம் சூதெறிந்து - இந்த
ஐந்தாட்டமும் அண்ணாவே வென்றுவிட்டேன் |
காத்தவராயன் வசனம்:
|
தம்பி சின்னான் ஆட்டத்தை நிறுத்து. எதிலுமே தோல்வியைக் காணாத நான் இன்று சூதாடுவதில் அதுவும் உனது மாளிகையில் தோல்வியைச் சந்திது விட்டேன். இதற்குக் காரணம் எனது தாயாரின் திருவிளையாட்டாகத்தான் இருக்கவேண்டும். எதற்கும் ஒருகணம் எனது அம்மாவை நினைந்தபின் மறுபடியும் ஆட்டத்தைத் தொடரலாம்.
|
சின்னான் வசனம்:
|
அப்படியே ஆகட்டும் அண்ணா.
|
காத்தவராயன் வசனம்:
|
அம்மா! உனது மகன் தோல்வியென்பதை அறியாதவன். இன்று சின்னானிடம் அவனது மாளிகையில் தோல்வியுறுகின்றேன். நின் கடைக்கண் பார்வை என்மீது படவேண்டும் தாயே...
|
காத்தவராயன் பாடல்:
|
மலைக்கு மலை நடுவே என் மாரியம்மா
மலையாளத் தேசமம்மா அம்மா தேசமம்மா மலையாளத் தேசத்திலே என் மாரியம்மா விளையாடப் பெண் பிறந்தாய் அம்மா நீ பிறந்தாய் சின்னானுடை மாளிகையில் என் மாரியம்மா சிதைந்து நான் வாடுகின்றேன் அம்மா வாடுகின்றேன் மைந்தன் நான் வாடுவது என் மாரியம்மா உந்தனுக்கு கேட்கலையோ அம்மா கேட்கலையோ பாலன் நான் வருந்துகின்றேன் என் மாரியம்மா பத்தினியே வாவேனம்மா வந்து வரம் கொடம்மா அந்தரித்த வேளை அம்மா என் தாயாரே வந்து அருள் தாவேனணை அம்மா அருள் கொடம்மா பந்தயத்தில் நான் ஜெயிக்க என் மாரியம்மா பகடையாய் வாவேனம்மா அம்மா வரம் கொடம்மா சொக்கட்டான் வெல்வதற்கு என் மாரியம்மா பக்க பலம் நீ தருவாய் தேவி துணை தருவாய் |
முத்துமாரி அம்மன் வசனம்:
|
மகனே காத்தவராயா உனக்கு வரம் தந்து பக்கபலமாக நான் இருக்கிறேன். நீ ஆட்டத்தைத் தொடர்வாயாக.
|
காட்சிக்குறிப்பு:
|
முத்துமாரி அம்மனின் இவ்வசனம் பின்னணியிலிருந்து அசரீரியாகவும் ஒலிக்கலாம் அல்லது முத்துமாரி அம்மன் அரங்கில் தோன்றியும் வரம் அளிக்கலாம்.
|
காத்தவராயன் வசனம்:
|
அப்படியே செய்கிறேன் தாயே. சின்னான் இனி ஆட்டத்தைத் தொடர்வாயாக.
|
சின்னான் பாடல்:
|
சொக்கட்டான் சொக்கட்டான் போட்டல்லவோ - எந்தன்
சூதுகளை முற்றாகத் தோற்றுவிட்டேன் |
காத்தவராயன் பாடல்:
|
சொக்கட்டான் சொக்கட்டான் போட்டல்லவோ - உந்தன்
சூதுகளை முற்றாக வென்றேனடா |
சின்னான் பாடல்:
|
பகடையெல்லோ பகடை நானெறிந்து - எந்தன்
பந்தயங்கள் முற்றாகத் தோற்று விட்டேன் |
காத்தவராயன் பாடல்:
|
பகடையெல்லோ பகடை நானெறிந்து - எந்தன்
பந்தயங்கள் முற்றாக வென்றேனடா |
|
தொடரும்...
|
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.