வெகுசிறப்புடன் நடைபெற்ற மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலய இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா!
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று வியாழன் காலை வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று வியாழன் காலை வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இடப்பெயர்வு காலகட்டத்தில் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்டிருந்த இவ்வாலயத்தை மீளவும் கட்டியெழுப்பும் அரும்பணியின் தொடர்ச்சியாக இராச கோபுரத்திற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வானது 108 சங்கு ஸ்தாபனமாக நேற்றைய தினத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்றுள்ளது.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிகழ்வானது, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பாலாலயத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அத்திபாரத்திற்காக அடிக்கல் நாட்டுவதற்கு தயார்செய்யப்பட்டிருந்த அத்திபார கற்களை எடுத்துவந்து இராச கோபுரம் அமையவிருக்கும் இடத்தில் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. கிரியா குரு சிவஶ்ரீ சோமதேவ குருக்கள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதான அத்திபார கல்லை இராசகோபுர உபயகாரர் குடும்பத்தினர் நாட்டியதைத் தொடர்ந்து சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டிருந்த தென்கயிலை ஆதீன குருமுதல்வர் தவத்திரு அடிகளார், அகில இலங்கை சைவமகா சபை பொருளாளர் அருள் சிவானந்தன், வலி வடக்கு பிரதேச செயலர் ச.சிவஶ்ரீ ஆகியோரால் அத்திபார கற்கள் உரிய முறைப்படி நாட்டப்பட்டது. தொடர்ந்து ஊர் மக்கள் வரிசையாக வந்து 108 சங்குகளை தத்தமது கைகளால் எடுத்து நாட்டியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் ஆலய பரிபாலன சபையின் தலைவர் பொ.இராசகுமார் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது. கிரியாகுரு சிவஶ்ரீ சோமதேவக் குருக்கள் மற்றும் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஆகியோர் ஆசியுரையினை வழங்கியிருந்தார்கள். அகில இலங்கை சைவமகா சபை பொருளாளர் அருள் சிவானந்தன் மற்றும் வலிவடக்கு பிரதேச செயலர் ச.சிவஶ்ரீ ஆகியோரின் வாழ்த்துரையினை தொடர்ந்து ஆலய பரிபாலன சபையின் காப்பாளர்களில் ஒருவரான அ.குணபாலசிங்கம் மற்றும் செயலாளர் இரா.மயூதரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கியிருந்தனர். முன்னதாக சுமார் நூற்றிஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய இவ் ஆலயத்தின் வரலாற்றை மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த செல்வி இ.சர்மிகா கவிதை வடிவில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார்.
வலி வடக்கு பிரதேசத்தின் மீதான சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கை காரணமாக 15/06/1990 அன்று மயிலிட்டி பிரதேச மக்களும் இடம்பெயர்ந்திருந்த நிலையில் 28 ஆண்டுகளின் பின்னராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டிருந்தது. மயிலிட்டி பகுதியில் ஏற்கனவே இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள், ஆலயங்கள், தொழிற்சாலைகள் என ஒட்டுமொத்தமாக இடித்தழிக்கப்பட்ட நிலையிலேயே விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆலய வழிபாட்டு சூழலோடு ஒன்றித்ததாக கட்டியமைக்கப்பட்டிருந்த தமிழர் வாழ்வியலை மீட்டெடுப்பதன் ஊடாகவே ஒழுக்கமான சமுதாயத்தை மீள உறுதிசெய்யமுடியும் என்ற அடிப்படையில் சிறிலங்கா இராணுவத்தினாரால் இடித்தழிக்கப்பட்டிருந்த இவ் ஆலயத்தை மீளவும் உருவாக்க மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றமை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் சிவஶ்ரீ சோமதேவ குருக்கள், தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார், அகில இலங்கை சைவமகா சபை பொருளாளர் அருள் சிவானந்தன், வலிவடக்கு பிரதேச செயலர் ச.சிவஶ்ரீ, அகில இலங்கை சைவமகா சபை உப தலைவர் பி.பொன்ராசா, தமிழ்நாடு சீர்காழியைச் சேர்ந்தவரும் இவ் ஆலயத்தை அமைத்துவருபவருமாகிய ஸ்தபதி க.புருஷோத்தமன், மயிலிட்டித்துறை வடக்கு யாழ்/251 கிராம உத்தியோகத்தர் கா.துவாரகன், மயிலிட்டித்துறை வடக்கு யாழ்/251 அபிவிருத்தி உத்தியோகத்தர் க.வீரசிவாகரன், வெண்கரம் அமைப்பின் நிறுவுநர் மு.கோமகன் ஆகியோருடன் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
தகவல்: இரா.மயூதரன்